செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இந்தியப் பாராளுமன்றக்குழுவின் இலங்கை வருகை

தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே இலங்கை வரும் "இந்தியப் பாராளுமன்றக் குழு" என குற்றம் சாட்டியுள்ளது நவசமசமாஜக்கட்சி  தெரிவித்துள்ளது.


இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது.



இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை சமாதானபடுத்தவே இக்குழு இங்கு வருகிறது. இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக் குழுவின் திட்டமாகும். தமிழ் மக்களை வாழ வைப்பதற்கு அல்ல அம்மக்களை அடக்கியாள்வதே இவ் விஜயத்தின் இலக்காகும்.





தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தை பாதுகாக்கும் இந்தியக் குழுவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரதிநிதி வாபஸ் பெறப்பட்டமை வரவேற்புக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் உணர்வுகளை தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்தியமையே இதற்கு காரணமாகும்.

இக்குழுவின் விஜயத்தால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை.மாறாக அம் மக்களின் வளங்கள் சூறையாடப்படவுள்ளதென்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். இவையாவும் உண்மை என்பது போலவே இக்குழுவின் நிகழ்ச்சி நிரலும் அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குழு போவதாகத் தெரியவில்லை.  முள்வேலி முகாமில் இன்னும் கூட அடைபட்டிருக்கும் தமிழர்களையும் இவர்கள் பார்ப்பதாக நிகழ்ச்சி நிரலில் இல்லை. போர் நடந்த பகுதிகளுக்கும் இவர்கள் போவதாகவும் தெரியவில்லை.

இந்நிலையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன், இலங்கை புறப்படுவதற்கு முன்னர் நிருபர்களிடம் பேசியபோது , இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சென்று, அவர்களின் உண்மை நிலை மற்றும் வாழ்வாதாரங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழு நேற்றிரவு (திங்கட்கிழமை) இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்தது.

 இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இத்தூதுக்குழுவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 புதுடில்லியிலிருந்து விசேட விமானம் மூலம் புறப்பட்ட இத்தூதுக்குழுவினர் நேற்றிரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்தடைந்தனர். இக்குழுவில் திமுக இடம்பெறாதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இத் தூதுக்குழுவினரை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோர் வரவேற்றனர்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக