வெள்ளி, 25 மே, 2012

வியாழன்

வியாழன்(Jupiter) சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரியமண்டலத்திலேயே மிகப் பெரிய கிரகமாகத் திகழ்வதால் அதற்கு ரோமானியர்கள் தமது கடவுள்களின் அரசனும் வானத்தின் தேவனுமான ஜுபிடர் எனும் பெயரைச் சூட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது. வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும். சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள ‌வியாழ‌ன் கிரகம், வி‌ண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடு‌த்தபடியாக பிரகாசமாகத் தெரியக் கூடிய ‌கிரகமாகும்.
ஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்களினால் பெரும் கனவளவு நிரப்பப் பட்ட பெரு வாயுக் கோளான வியாழன் ஜோவியான் அல்லது வெளிப்புறக் கிரகங்கள் நான்கிலும் மிகப் பெரியதும் அதிக ஈர்ப்புச் சக்தி உடையதுமான கோளாகும். 
சூரிய மண்டலத்தின் உட்கோள்களான (Inner Planets) புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் (Rocky Planets) போன்றில்லாது, புறக்கோள்களில் (Outer Planets) ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம். சூடான பாறையும், திரவ உலோகம் (Liquid Metal) சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. சூரிய சுற்றுப்பாதையில் (சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு (Earth Years) ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது.
பூமியுடன் வியாழனை ஒப்பிடும் போது
சூரியனிடமிருந்து சராசரியாக 484 மில்லியன் மைல் தூரத்திலும் பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை[Mass] பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது வியாழன். மேலும் சூரிய குடும்பத்தில் மிக அதிக பட்சமாக 64 துணைக் கோள்களை வியாழன் கொண்டுள்ளது. இவற்றில் கனீமிட் எனும் துணைக் கோள் புதன் கிரகத்தை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன் கிரகத்துக்குள் அடிக்கடி புயல்க‌ள் அடி‌க்கு‌ம். மூன்று பூமிக்கு இணையான பரப்பள‌வி‌ல் வீசிய ஒரு புயல், பல நூறு ஆண்டுகளுக்கு நீடித்து‌ள்ளது. தொலைநோக்கியால் பார்த்தால் வியாழன் கிரகத்தின் நிலாக்களைக் காணலாம். கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அனுப்பிய கலீலியோ விண்கல‌த்‌தி‌ல் இரு‌ந்த செ‌‌ன்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது.  
வியாழன் ரோபோட்டிக் விண்கலத்தாலும் நாசாவின் பயனீயர் மற்றும் வொயாஜெர் செய்மதிகளாலும் கலிலீயோ ஆர்பிட்டர் எனும் விண்கலத்தாலும் விரிவாக ஆராயப்பட்ட கிரகமாகும். மேலும் 2007 பெப்ரவரியில் வியாழனின் சுற்றுப்பாதை வழியாக புளூட்டோ கிரகத்தை ஆராயச் சென்ற நியூ ஹாரிஸன் எனும் விண்கலத்தால் சமீபத்தில் வியாழன் படம் பிடிக்கப்பட்டது. இவ்விண்கலம் வியாழனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி தனது வேகத்தை அதிகரித்துக் கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வியாழனின் துணைக் கோளான இயுரோப்பா பனிக்கட்டி மூலக்கூறுகளாலான சமுத்திரத்தை உடையது எனும் காரணத்தால் அது வானியலாளர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 
வியாழன் குறித்த சுருக்கமான தகவல்கள்
(தகவல்கள் விக்ககிபீடியா)