வியாழன், 6 டிசம்பர், 2012

விஸ்வரூபம் முதலில் டிவியில்


 விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.


எதிலும் புதுமைகளை படைப்பதில் கமலுக்கு நிகர் கமல் தான். ஹாலிவுட் தரத்தில் தான் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.இல் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். இதனால் தாங்கள் பெருமளவு பாதிக்கப்டுவோம் என்று தியேட்டர் அதிர்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கமல் தரப்புக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் பிரச்னை உருவாகியுள்ளது. 

கமல் திட்டப்படி விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு பெரிய நடிகரின் படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டி.டி.எச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டி.டி.எச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

விஸ்வரூபம் படத்தின் டி.டி.எச் வெளியீட்டு விவகாரம் ஒருபக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்க, கமல் ஹாஸனோ அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிஸியாகிவிட்டார்.இப்படம் ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கும் அதே வேளை நாளை 7ம் தேதி படத்தின் ஆடியோ ரிலீசும் நடக்கவிருக்கிறது.

சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ள விஸ்வரூபம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஏற்கெனவே ஜெயா டிவி வாங்கிவிட்டது. இப்போது இசை வெளியீடு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையும் பெற்றுள்ளது. மூன்று நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் ஜெயா டிவிதான் ஒளிபரப்பப் போகிறது.

திறந்தவெளி மைதானத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவது கமலுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தனது விருமாண்டி பட இசை வெளியீட்டை கேம்பகோலா மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தியவர் கமல் என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக