செவ்வாய், 5 மார்ச், 2013

ஹைதராபாத் டெஸ்ட் - இந்தியா அபார வெற்றி


ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 
 ஹைதராபாத்தில் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. இந்திய அணியின் முரளி விஜய், புஜாரா ஜோடி அபாரமாக விளையாடியது. 
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் 503 ரன்களில் இழந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 266 ரன்கள் முன்னிலை வகித்தது.. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணி விளையாடத் தொடங்கியது. 
நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை எடுத்திருந்தது. இன்று தமது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியால் இந்தியாவின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியைப் போல அஸ்வின் விஸ்வரூபம் காட்டினார். அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 ஆஸ்திரேலியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது