வியாழன், 23 மே, 2013

ஐ.பி.எல் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் சிக்கிய குருநாத் மெய்யப்பன் ஏவிஎம்மின் பேரன்


ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் சிக்கியுள்ள குருநாத் மெய்யப்பன் ஏவிஎம் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். ஸ்பாட் ஃபிக்சிங் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல் அணி வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புக்கிகள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். பிக்சிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள விண்டூ தாரா சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய புள்ளியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என போலீசார் ஏற்கனவே கூறியிருந்தனர். இந்நிலையில் அந்த முக்கிய புள்ளி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் என்றும், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தாம் மெய்யப்பனிடம் தொடர்பு வைத்திருந்ததை விண்டூ தாரா சிங் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஸ்ரீனிவாசனின் மகள் ரூபாவைத்தான் இந்த குருநாத் மெய்யப்பன் திருமணம் செய்துகொண்டுள்ளார். ரூபா, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.


இதனிடையே குருநாத் மெய்யப்பன் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும், அதே சமயம் பெரிய தொகையை கட்டி பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இதுவும் சட்டவிரோதம்தான் என்றும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.