செவ்வாய், 29 ஜனவரி, 2013

அமெரிக்காவில் விஸ்வரூப வசூல்



விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்கா மற்றும் லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஸ்வரூபம் படம் தமிழகத்தில் தடையைச் சந்தித்து, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலும் தடையைச் சந்தித்த போதிலும், வெளிநாடுகள் சிலவற்றில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை, கிளம்பிய எதிர்ப்பு ஆகியவற்றால் கவரப்பட்ட ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தைக் காண அரங்குகளில் குவிந்து வருகின்றனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், சராசரி ஆங்கிலப் படங்களின் முதல்வார வசூல் சாதனையை விஸவரூபம் அமெரிக்காவில் முறியடித்துள்ளதாம்.


பிரிட்டனின் பல்வேறு நகரங்களிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக தற்போதும் லண்டனில் விஸ்வரூபம் திரைப்படம் ஓடுகிறது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்படாமல் இருந்தால் விஸ்வரூபம் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

‘யுஎஸ் பாக் ஆபிசை’ப் பொறுத்த வரையில் படம் வெளியான சென்ற வார இறுதியில் 6,34,912 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. நம் இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 43 லட்ச ரூபாய். இது சென்ற வாரத்திய அதாவது மூன்று நாள் நிலவரம் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக