புதன், 18 ஏப்ரல், 2012

சூரியன்

 இவ்வுலகில் அனைத்து ஆற்றல்களுக்கும்  மூல காரணமாக விளங்குவது சூரியனே ஆகும். அதனால் இன்று சூரியனைப் பற்றி முடிந்தளவு எழுதப் போகிறேன்.
 
சூரியன் என்பது மிகப்பெரிய நட்சத்திரமாகும்..

சூரியனின் ஈர்ப்பு விசையாலேயே பூமி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளம் தான் நம் சூரியன். மேற் புற வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ், மையப் பகுதியின் வெப்பநிலை 15,000,000 டிகிரி செல்சியஸ் ஆகும். வயது 500 கோடி ஆண்டுகள், இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிச்சயமாக உயிர் வாழும் தகுதி உடையது (சூரியனை நடுவயதுடைய நட்சத்திரம் என்றும் அழைக்கப்டுகிறது) 9.8 கோடி மைல் தூரத்தில் இருக்கின்றது. பூமியிலிருந்து 1000 கி.மீ வேகத்தில் பறந்தால்  கூட சூரியனை சென்றடைய 12 வருடங்களாவது ஆகும். (சூரியனில் 92%  ஹைட்ரஜனம், 7.8% ஹீலியமும், 0.2% இதர வாயுக்களும் உள்ளன) சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். 

சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது 5,88,00,00,000 மைல்கள். இந்த அண்டத்தின் மையத்தைப் பற்றிக் கொண்டு வினாடிக்கு 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒரு முறை சுற்றி வரச் சூரியனுக்கு சுமார் 225 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. இத்துடன் சூரியன் தனது அச்சைப் பற்றிக் கொண்டு ஒருமுறை சூழலத் துருவத்தில் 24 முதல் 25 நாட்களும், மைத்தில் 34 முதல் 37 நாட்களும் ஆகின்றது.

nuclear fusion எனப்படும் அணு இணைவு வினை நான்கு ஹைட்ரோஜென் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவாக மாறுவதால் வெ ப்பம் வெளியேற்றப்படுகின்றது. 



செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இந்தியப் பாராளுமன்றக்குழுவின் இலங்கை வருகை

தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே இலங்கை வரும் "இந்தியப் பாராளுமன்றக் குழு" என குற்றம் சாட்டியுள்ளது நவசமசமாஜக்கட்சி  தெரிவித்துள்ளது.


இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது.



இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை சமாதானபடுத்தவே இக்குழு இங்கு வருகிறது. இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக் குழுவின் திட்டமாகும். தமிழ் மக்களை வாழ வைப்பதற்கு அல்ல அம்மக்களை அடக்கியாள்வதே இவ் விஜயத்தின் இலக்காகும்.





தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தை பாதுகாக்கும் இந்தியக் குழுவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரதிநிதி வாபஸ் பெறப்பட்டமை வரவேற்புக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் உணர்வுகளை தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்தியமையே இதற்கு காரணமாகும்.

இக்குழுவின் விஜயத்தால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை.மாறாக அம் மக்களின் வளங்கள் சூறையாடப்படவுள்ளதென்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். இவையாவும் உண்மை என்பது போலவே இக்குழுவின் நிகழ்ச்சி நிரலும் அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குழு போவதாகத் தெரியவில்லை.  முள்வேலி முகாமில் இன்னும் கூட அடைபட்டிருக்கும் தமிழர்களையும் இவர்கள் பார்ப்பதாக நிகழ்ச்சி நிரலில் இல்லை. போர் நடந்த பகுதிகளுக்கும் இவர்கள் போவதாகவும் தெரியவில்லை.

இந்நிலையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன், இலங்கை புறப்படுவதற்கு முன்னர் நிருபர்களிடம் பேசியபோது , இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சென்று, அவர்களின் உண்மை நிலை மற்றும் வாழ்வாதாரங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழு நேற்றிரவு (திங்கட்கிழமை) இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்தது.

 இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இத்தூதுக்குழுவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 புதுடில்லியிலிருந்து விசேட விமானம் மூலம் புறப்பட்ட இத்தூதுக்குழுவினர் நேற்றிரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்தடைந்தனர். இக்குழுவில் திமுக இடம்பெறாதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இத் தூதுக்குழுவினரை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோர் வரவேற்றனர்.


 

ஹிட்லர்

பிந்திய புதுவருட வாழ்த்துக்களுடன் இதற்கு முதல் பதிவில் உலக அழவு பற்றியும் இந்த பதிவில் 20ம் நூற்றாண்டில் அதிக மனிதர்களை அழித்த அடால்ஃப் ஹிட்லர் பற்றியும் எழுதப் போகிறேன். இதே 20ம் நூற்றாண்டுதான் நமக்கு "அஹிம்சை" என்றவும் உடனே ஞாபகத்துக்கு வரும் மகாத்மா காந்தியையும் தந்தது.


வட ஆஸ்திரியாவின் பிரானவ் என்ற ஊரிர் 1889 ஏப்ரல் 20ஆம் திகதி ஹிட்லர் பிறந்தார். சுங்க இலாகா அதிகாரியாக இருந்த அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர் என்பவரின் மூன்றாம் மனைவி கிளாராவின் ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாகவே அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா இட்லர் மட்டும்தான். 
பிறந்தது முதல் ஹிட்லர் நோயாளியாகவே இருந்தார்.  அடிக்கடி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகேக உடல் தேறியது. பள்ளியில் படிக்கும் போது ஹிட்லர் வகுப்பில் முதல் மாணவராகத்  திகழ்ந்த போதிலும் பின்னர் படிப்பில் ஆர்வம் குறைந்தது. ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். போர் பற்றிய கதைகள் படிப்பதில் அதிக ஆவல் கொண்டிருந்தார். 
இவரும் இவரைவிட ஏழு வயது சிறியவரான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் இட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு இவரும் தாயாரும் ஆளாக்கப்பட்டனர். தன் தந்தை எப்படி தன்னையும் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புருவதை கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார். அதே சமயம் அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார். பொருளாதார சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது.  
ஜனவரி 3, 1903 ல் அவருடைய தந்தை இறந்து போனார் இப்போது ஹிட்லருக்கு 14 வயதுதான் ஆகியிருந்தது. தந்தையின் பாதுகாப்பு, அரவணைப்பு இன்மை காணமாக ஹிட்லர் நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களிடமும் சண்டை பிடித்தார். இதே பள்ளியில்தான் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலாக லுட்வக் விட்ஜென்ஸ்டின்  (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவ்வியலாளர்) படித்தார் என்பதும் பபகுறிப்பிடத்ததக்கது. இருவரும் ஓருவரையொருவர் சந்தித்ததேயில்லை.
ஹிட்லர் தனது 17வது வயதில் பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். இதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக் கொண்டு வரும் வழியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதுடன்  சான்றிதழையும் கிழித் தெறிந்தார். இதற்காக பபாடசாலையில் கண்டிக்ப்பட்டார். அப்போது 'இனி என் வாழ் நாளில் சிகரெட்டையும் மதுவையும் தொடமாட்டேன்' என்று சபதம் செய்தது சாதாரணமாக இருந்தாலும் மரணிக்கும் வரை அதை கடை பிடித்தது ஆச்சரியமானது, ஒரு சிலருக்கு அது உமாரணமும் கூட.... அத்தோடு டிப்ளோமா கூட பெறாத நிலையில் படிப்பையும் நிறுத்திக்கொண்டார்.


வெறும் ஹிட்லராக இருந்தவருக்கு அடால்ப் என்ற பெயர் வந்ததன் காரணம்
அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். 1920 களில் அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.


1907 ம் ஆண்டு ஓவியக் கல்லூரியில் சேர முயற்சித்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை, அந்த ஆண்டின் இறுதியில் தாயாரும் இறந்து போனார். அதன் பிறகு ஓவியங்கள் வரைந்தே வாழ்க்கை நடத்தினார்.  ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் அதிக விலைக்கு விற்பனையாகியது, அதனால் சொந்தமாக ஓவியக்கூடமும் அமைத்தார். அந்த நேரத்தில் ஒரு பெண்ணை காதலித்தார். அதில் தோல்வியடையவே இராணுவத்தில் சேர்ந்ததார்.


முதலாம் உலகப்போரில் ஜேர்மனி இராணுவத்தில் ஒரு படைவீரராக பணியாற்றினார். போரில் ஜேர்மன் தோற்றத்திற்கு ஜனநாயக வாதிகளும் யூதர்களும் தான் காரணமென ஹிட்லர் நினைத்தார். 'உலகில் ஜேர்மனியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்' என விரும்பினார். பேச்சுவன்மை மிக்க ஹிட்லர் 'தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி'யில் இணைந்து மிக விரைவில் கட்சித் தலைவரானார். அரசாங்கத்திற்கெதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற போதிலும் அதில் தோல்வி கண்டு சிறை சென்றார். சிறையில் இருந்த போது 'என் போராட்டம்' எனும் பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.


914 ஒய்பெர்ஸ் (Ypers) சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் ஹிட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் இட்லர் விமர்சித்து பேசப்பட்டார் ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை இட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார்.

15 அக்டோபர் 1918 இட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.அந்த சந்தர்ப்பத்திலும் யூதர்களை அழிப்பதிலேயே கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. (1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை.)  அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின. பிறப்பால் ஆஸ்டிரியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1918 இல் ஜேர்மனி தோற்றது. இத் தோல்விக்கு ஜனநாயகவாதிகளும் யூதர்களும் தான் காரணம் என்று ஹிடலர் நினைத்தார்.உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தவர்.உலகம் முழுவதையும் ஜேர்மனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என விரும்பினார்.ஹிட்லர் பேச்சு வல்லமை மிக்கவர்.தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்ந்து தனது பேச்சு வல்லமையால் விரைவிலே கட்சித் தலைவரானார்.

அரசாங்கத்தின் நிர்வாக திறமை இன்மையால் தான் நாட்டில் வறுமை வேலையின்மை பெருகிவிட்டதாக பிரச்சாரம் செய்தார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.அரசாங்கம் அவரை கைது செய்து 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பின்பு அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது.சிறையிலிருந்த போது "எனது போராட்டம்"என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.

1928 இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது.ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.தன்னுடைய கட்சியின் பெயரை "நாசி"கட்சி என்று மாற்றி நாடுமுழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார்.
இவருடைய இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் இராஜ தந்திரமும் வெற்றி பெற்றன.ஆட்சிக்கு எதிராக மக்ககள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்ற கட்டடம் கொளுத்தப்பட்டது.ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார்.1933 ஜனவரி 30 ஆம் திகதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார்.


அதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜேர்மனின் சர்வாதிகாரியானார்.பாராளுமன்றத்தை கலைத்தார்,இராணுவ திணைக்களத்தினையும்,இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார்.அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார்.இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.

யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என முடிவு செய்து ஒரு பாவமும் அறியாத யூதர்களை கைது செய்து சிறையில் பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொன்றான்.தினமும் சராசரியாக 6000 - 10000 பேர் வரை விஷப் புகையிட்டு கொல்லப்பட்டனர்.ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம் ஆகும்.1939 அல்பேனியா,செக்கொச்லோவக்கியா ஆகிய நாடுகளை கைப்பற்றிக்கொண்டு போலந்து நாட்டின் மீது படைஎடுத்தான்.

இதனால் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தது.ஆனால் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது.ஜேர்மனி தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து தங்கியிருந்தார்.இச் சுரங்கத்தில் தான் ஹிட்லரின் அலுவலகமும் படுக்கை அறையும் இருந்தது.ஹிட்லரின் அறை 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது.1945 ஏப்ரலின் பின் பெர்லின் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசின.ஹிட்லர் தங்கியிருந்த பாதாள சுரங்கத்தின் அருகிலும் குண்டுகள் விழுந்தன.ஈவா பிரவுன் என்ற பெண் 1930 ஆம் ஆண்டு முதல் ஹிட்லர் உடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தார்.

ஹிட்லர் இறப்பதுக்கு முன் எழுதிய மரண சாசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

  • நாங்கள் இறந்த பிறகு எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டு வந்தேனோ இந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும் ஈவாவையும் உடனே எரித்து விட வேண்டும்.
  • என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு பிறகு என் கட்சிக்கு சேர வேண்டும்.கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கு சேர வேண்டும்.
  • ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும் பாசமும்தான் என்னை வழிநடத்தின .கடந்த 30 ஆண்டுகளாக என் சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காக செலவிட்டிருக்கிறேன் .
  • இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.ஏனென்றால் போர் வெறி கூடாது .ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும்,என்று நானே வலிறுத்தி இருக்கிறேன்.
  • முதல் உலகப்போருக்கு பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை .எப்படியோ போர் மூண்டுவிட்டது.
  • இந்தப்போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள்,நாசமாக்கப்பட பிரம்மாண்டமான மாளிகைகள்,தரைமட்டமாக்கப்பட்ட கலையம்சம் மிக்க நினைவுச்சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.
  • இந்த போருக்கு காரணமானவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜேர்மனிய இளைஞனுக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்ப்படும்.

30 ஆம் திகதி இரவு 9 மணி "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வதிகாரி முசோலினியும் அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர் ".என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது.
ரேடியோ செய்தியை ஹிட்லர் நேரடியாக கேட்டார் .முசோலினியின் முடிவு,ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது .அன்றிரவு 12 மணி பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும் எந்த நேரத்திலும் ,சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும் ,ஹிட்லருக்கு தகவல் கிடைத்தது.

ஹிட்லரின் முகம் இருண்டது .மவுனமாக எழுந்து ,தன் தோழர்களுடன் கை குலுக்கினார் .பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து ,"நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம்.நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி ,பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள்.எங்கள் அறையில் உள்ள கடிதங்கள்,டைரிகள்,என் உடைகள் என் பேனா,கண்ணாடி முதலிய பொருட்களை சேகரித்து ,ஒன்று விடாமல் எரித்து விடுங்கள்"என்று கூறிவிட்டு தன் மனைவியையும் அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றார்.

அறைக்கதவு சாத்தப்பட்டது .வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.ஹிட்லரும், ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும் ,தளபதிகளும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் .

ஒரு சோபாவில் உட்காந்திருந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல் . அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது.அவர் சற்றுநேரத்துக்கு முன்னர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதால் துப்பாக்கி நுனியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.அவரின் வலது காதுக்கு கீழிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டுஇருந்தது.ஹிட்லரின் வலது கரம ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது.அது ஹிட்லரின் தாயாரின் புகைப்படம்.
அவருடைய மனைவி ஈவா வெள்ளைப்புள்ளிகளோடு கூடிய கருநீல மாக்சி உடை அணிந்து இருந்தால்.அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது.எனவே அவள் சைனட் விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.இருவரது உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள்.பின்னர் அந்த உடல்களை தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிகொண்டு போய் எரித்தார்கள்.


வியாழன், 12 ஏப்ரல், 2012

2012-12-21 இல் உலகம் அழிகிறதா?

அணைவருக்கும் முந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவு தேவைதானா? என்று கேட்டால் தெரியவில்லை, நேற்றைய சுனாமி எச்சரிக்கையும் இந்த பதிவு எழுத ஒரு காரணமாக அமைந்தது.

அடிக்கடி வரும் பூகம்பம், சுனாமி எச்சரிக்கை, குளோபல் வார்மிங் (Global warming) எனச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் காரணமா உலக மக்கள் அணைவரும் "உலக அழிவு" பற்றி சிந்திப்பது நியாயமானதே. 
எதிர்வரும் 2012.12.21 ஆம் திகதி மு.ப 11:11 அளவில் மாயன் நாள்காட்டி முடிவிற்கு வருகிறது. அப்படியானால் இன்னும் எஞ்சியிருப்பது 253 நாட்கள் மட்டுமே. இதன் காரணமாக மக்களிடம் பல கருத்துக்கள் நிலவி வருகின்றது, அவற்றில் முக்கியமானது 2012-12-21 மு.ப 11 மணி 11 நிமிடம் 11 விநாடியுடன் உலகம் அழிவை நெருங்குகின்றது என்பதேயாகும்.

மாயன் நாகரீகம் பற்றி பார்ப்போமானால்....
சீன, எகிப்திய, சிந்துவெளி நாகரீகளைப் போல  சிறப்பு பெற்ற நாகரீகமே இந்த மாயன் நாகரீகம். இந்நாகரிகம் இப்போதைய மெக்ஸிகோ, ஹொண்டுரஸ் மற்றும் கௌதமாலா , எல்சல்வடோர் போன்ற நாடுளில் 625 மைல் நிலபப்பரப்பில் மாயர்கள் வாழ்ந்து வந்தததாக   ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில் அழிந்தது. 

மாயன் நாகரிக மக்கள் கணிதம், சோதிடம், கட்டடக்கலை, நகர நிர்மாணம், நீர் முகாமைத்துவம் மற்றும் வானியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினர் என்று ஆய்வுகள் சான்று கூறுகின்றன. இவர்களும் எகிப்தியர்களை போலவே சூரியனையே வழிபட்டார்கள். பொருளாதாரம், வணிகம் மற்றும் விவசாய பொருள் உற்பத்தியை அடிப்படைடயாக கொண்டிருந்த இம்மாயன் நாகரீகம் கி.பி 250-900 வரையீலான காலப்பகுதியல் உச்சத்தில் இருந்தது குறிப்படத்தக்கது. இவர்கள் கட்டடங்கள் அமைபப்தற்கு செங்கற்களை பயன்படுத்தியதோடு அவை ஒரே அளவை கொண்டதாகவும் காணப்பட்டது. இவர்களின் சிறந்த கட்டட கலையின் சான்றாக மெக்சிகோ நகரின் சியாபாஸ் ஏன் இடத்தில் மாளிகைகள், கோவில்கள் என பல கட்டடங்களை  ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட வளத்துடன் ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஆழிந்து போனமைக்கு காரணத்தை அறிஞர்கள் இன்னும் உறுதியாக கூறவில்லை. ஆனாலும் சில காரணங்கள், அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை போன்ற நோய்கள் பெருவாரியான மாயன்களை அழித்திருக்கலாம். (ஆனாலும் இன்னும் சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் அதிகமானோர் வரிய நிலையில் வசிக்கிறார்கள்.) இப்படிப் பட்ட சிறந்த நாகரிகமானது விட்டுச் சென்றுள்ள ஒரு விடயம் தற்பொழுது சர்ச்சைக்குரியதாகவும் மக்களுக்கு பயத்தை உண்டாக்கக் கூடிய ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.


அது தான் மாயன் நாட்காட்டி விவகாரம். இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு நாட்காட்டியினை அவர்களும் வைத்திருந்தனர். இந்த நாட்காட்டி கி.மு 313ல் தொடங்கியது. இதன்படி 2012. 12. 21 ம் திகதியுடன் முடிவடைகிறது. அதனால் உலகம் அந்தத் தேதியுடன் முடிவடையும் என்று அவர்கள்  உணர்ந்து முற்றுப்புள்ளி வைத்ததாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது சூரிய மண்டலத்திற்கு ஒரு வாரம் என்பது பூமிக்கு 25,625 வருடங்களாம். இதனை மாயன் காலண்டர் 5 கால கட்டங்களாகப் பிரிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டிருக்கிறது. இதன்படி 4 கால கட்டங்கள் முடிவடைந்து இப்போது 5வது காலகட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த நாட்காட்டி 21.12.2012ல் முடிவடைகிறது. அதன்படி 21.12.2012ல் உலகம் அழியும் என்று ஒரு சாரார் நம்புகிறார்கள். ஆனால் 2012 ல் உலகம் அழியும் என்று மாயன் இனம் எங்கும் சொல்லவில்லை. அவர்கள் தனது இனத்தின் அழிவைப் பற்றியே கூடச் சொல்லவில்லை என்பதே உண்மையாகும். இயற்கைப் பேரழிவுகளை இதோடு சம்பந்தப்டுத்தக் கூடாது பூமி தோன்றிய நாளிலிருந்து அங்காங்கே இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது.

 2012.12.21 பற்றி சிந்திக்க வேண்டிய சில காரணங்கள் 


2012 டிசம்பர் 21ம் திகதி சூரியன், பால்வெளி மண்டலத்தின் மத்திய கோட்டை அடைவதுடன் கரும் பள்ளம் என்று அழைக்கப்படும் Dark rift ஐயும் அண்மிக்கிறது  இந்த நிகழ்வு 26,000 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதும் ஆச்சரியமாக இருகக்கின்றது. அது மட்டுமன்றி பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும், பூமியும், பால்வெளி மண்டலத்தின் மத்திய கோட்டினூடாக, ஒரே நேர்கோட்டில் வரிசையாக வருகின்றன. இந்த ஆச்சரியகரமான நிகழ்வு 21.12.2012 இல் மிகச் சரியாக நடைபெறுவதாக சொல்லப்படுகின்றது. இது எல்லாமே சரியாக நடந்து உலகம் அழியும் என்பது சாத்தியமில்லை என்கிறரர்கள் விஞ்ஞானிகள்.

உலகம் அழியாது...
இந்த பூமி பல கோடி வருஷங்களுக்கு முன்னாடி சூரியன் வெடிச்சி, அதன்மூலம் சிதறனக் விண்கற்களெல்லாம் கிரங்களாக உருவாகியது. அப்படி உருவாகியதில் ஒன்றுதான் இந்த  பூமி. 
இந்த பூமி முழுமையாக அழிய வேண்டுமானால் அது சூரியானால் தான் நிகழ வேண்டும்.. இன்னும் 500 கோடி வருடங்களுக்கு அதைப்பற்றி யோசிக்கத் தேவையில்லை.சூரியனால் உயிர் வாழும் இந்த பூமிக்கு இன்னும் ஆயுற்காலம் நிறையவே இருக்கின்றது காரணம் சூரியன் தனது ஐட்ரஜன் எரிவாயுவை பாதியளவு கூட இன்னும் செலவழிக்க வில்லை. இன்னும் 500 கோடி வருடங்களுக்குக தேவையான எரிவாயுவை வைத்திருக்கின்றது. அதன் பிறகு வேண்டுமானால் சூரியனோட எரிபொருள் தீர்ந்து அது பல மடங்கு பெருசாகி அந்த வெப்பம் காரணமாக பூமி அழிந்துவிடும். அதன் பிறகு சூரியனும் நம்ம பூமி அளவுக்கு சுருங்கிடும் வாய்ப்பு இருக்கின்றது. இப்போதைக்கு அதைப்பற்றிய எந்த  கற்பனையும் நமக்கு தேவையில்லை.

இப்போதுள்ள பிரச்சினை  
மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கை சூழலை பாதுகாக்க தவறி அதை அழித்து வாழ்ந்து வருகிறான். சூழலை பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். நாம் இயற்கை சூழலை பாதுகாத்தால் சூழல் நம்மை பாதுகாக்கும் என்பது மட்டுமே நிச்சயமான உண்மை. நமது கடமையை தவறியதால் தான் ஓசோனில் துளை விழுந்து பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

ஓசோன் படையானது படைமண்டலத்தில் உள்ள பகுதியாகும். இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் கடல் மட்ட மேற்பரப்பில் இருந்து 15 - 40 கிலோ மீற்றர் உயரத்தில் நாம் வாழும் இந்தப் பூலோகத்தைச் சுற்றி பரந்து விரிந்து காணப்படுகிறது. இப்படையானது சூரியனில் புற ஊதாக்கதிர்களிடமிருந்து  பாதுகாப்பு இருந்து வீசப்படும் கவசமாக செயற்படுகின்றது. சூரியனிலிருந்து பூமிநோக்கி வருகின்ற புறஊதாக் கதிர்களை பூமியின் மீது விழுவதைத் தடுத்து பாதுகாப்பு கவசமாக இவ் ஓசோன் படை செயற்படுகின்றது. 

ஓசோன் படையில் ஓட்டை விழுந்திருக்கின்ற சங்கதியை விஞ்ஞானிகள் 1980ம் ஆண்டு காலப் பகுதியில் அவதானித்தனர். அன்டாட்டிக்கா எனப்படுகின்ற தென்துருவப் பகுதியில் ஓசோன் படையில் சுமார் 230 இலட்சம் சதுரமைல் பரப்புடன் கூடிய ஓட்டை விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டது.  

ஓசோன் தேய்விற்கு ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) காரணங்களாக உள்ளன. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இயற்கைச் சூழலை பாதுகாப்பது நமது கடமை மட்டுமன்றி அதுதான் நம் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் பெரும் செல்வமாகும்.

 










புதன், 11 ஏப்ரல், 2012

சுனாமி

சுமாத்திரா தீவில் ஏற்பட்ட 8.7 ரிச்டர் நில அதிர்வை அடுத்து இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கப் பட்டுள்ளார்கள். இலங்கைகயில் கிழக்கு தெற்கு மற்றும் யாழ்ப்பாணம், பகுதிகளில் கரையோரத்தில் உள்ளவர்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.

 இந்தோனேஷியாவில் பயங்கர நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக இலங்கையில் சுனாமி வர வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக வானிலை துறை அறிவித்துள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 8.7 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.இலங்கையில் இந்த ஆழிப்பேரலை நிலை மாலை 4 மணியளவில் ஏற்படலாம் என்றும் வானிலை அவதான மையம் அறிவித்துள்ள போதிலும் (இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை). இதேவேளை இந்த புவியதிர்வை அடுத்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியதிர்வு அளவு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையீல் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி வருகின்றமை குறிபிடத்ததக்கது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாடுகள்
INDONESIA / INDIA / AUSTRALIA / SRI LANKA /MYANMAR / THAILAND / MALDIVES / 
UNITED KINGDOM /MALAYSIA / MAURITIUS / REUNION /SEYCHELLES / OMAN / PAKISTAN / 
SOMALIA /MADAGASCAR / IRAN / UAE / YEMEN / COMORES /MOZAMBIQUE / KENYA / 
TANZANIA / CROZET ISLANDS /BANGLADESH / KERGUELEN ISLANDS / SOUTH AFRICA /
SINGAPORE

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

கடவுள்

கடவுள் நம்பிக்கைப் பற்றி பேசும் போது முக்கியமாக இரண்டு விடங்கள் பற்றி விவாதிக்க வேண்டியிருக்கின்றது. ஆஸ்திகம் மற்றும் நாஸ்திகம், ஆஸ்திகம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், நாஸ்திகம் என்பது இறைமறுப்பாளர்கள் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை குறிப்பிடும் சொல்லாக அமைகின்றது.
ஆஸ்திகம் = ஆஸ்தி + அகம்
நாஸ்திகம் =  நாஸ்தி + அகம்
ஆஸ்தி +  அகம் = "ஆஸ்தி" என்பது உடைமை அல்லது சொத்து என்று பொருள் படும், அகம் என்பது மனம்.  
நாஸ்தி + அகம் = "நாஸ்தி" என்பது அழித்துவிடுவது அல்லது இல்லாதொழிப்பது, அகம் என்பது மனம். 
 நம்மில் நிறைய பேர் ஆஸ்திகவாதிகள் (ரொம்ப நல்லவர்கள்) என்பதால் அதைப்பற்றி ஆராய அவசியமில்லை என்று நினைக்கின்றேன். 

நாஸ்திகம் (ரொம்ப பாவம்) = மனதை அழித்து வாழக்கூடியவர்கள் என்று பொருள் படுகின்றது. இந் விரிவாக்கம் எந்தளவிற்கு சரி என்று தெரியவில்லை. என் அறிவிற்கு எட்டியவரை என்னால் முடிந்தது இவ்வளவுதான். "நாஸ்திகம்" என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் "நாஸ்திகவாதி" ( மனதை அழித்து வாழக்கூடியவன்) என்பவன் இரக்கமில்லாதவன். கெட்டவன், கொடியவன் யோசித்துதுப்பார்த்தால் இப்படித்தான் பொருள் வருககின்றது. இறை மறுப்பாளன் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். பகுத்தறிவாளன் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏனெனில், இப்போதுதான் பகுத்தறிய ஆரம்பித்திருக்கிறோம்.

இனி......
கடவுள் என்பவர் யார் ? என்று கேட்டால்,பொதுவான விடயங்கள்
ரொம்ப நல்லவர், வள்ளவர், அன்பானவர், நீதியானவர், நேர்மையானவர், உண்மையானவர், இரக்கமுள்ளவர், தூணிலும் இருப்பார்-துரும்பிலும் இருப்பார் இதில் ஐந்து தொழில்கள் வேறு (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளள்) இவை யாவும் எந்தளவிற்கு உண்மை சாத்தியம் என்று மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் யோசித்துப்பார்க்கலாம். மொத்ததில் உயிர்கள் அணைத்தையும் படைத்து வழி நடத்துவது கடவுள்ததான் என்பது கடவுள் நம்பிக்கையுள்ள அணைவரினதும் வாதமாகும். அப்படியானால் ஒவ்வொரு மனிதனையும் கடவுள்தான் படைத்து கண்கானிக்கின்றார் என்ற முடிவிற்கு வர முடிகிறது. அப்போ கொலைகாரன், கொள்ளைக்கரன், பெண்களை-சிறுவர்களை கற்பழித்தவனையும் இந்த கடவுள் தான் (ரொம்ப நல்லவர்) படைத்தார் என்பதை மனசாட்சியுள்ள உங்களால் ஏற்றுக்கொள்ள முடியகிறதா? ஏற்றுக் கொண்டால் நீங்கள் நீங்கள் ரொம்ப நல்லவர்தான். ஏன் எந்த பாவமும் அறியாத சிறுமிகள் (யுத்தத்தில்) கொள்ளப்படவில்லையா? 16 வயதிற்கும் குறைவான பாடசாலை மானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட வில்லையா? ஆயிரக்கணக்கானர்கள் கொல்லப்படும் போது என்ன செய்தார் இந்த ரொம்ப நல்லவர்(கடவுள்). ஒரு நேர உணவுகூட இல்லாமல் எத்தனை பேர் தவிக்கின்றார்கள் (கடவுள் எல்லோருக்கும் பட்டினி போடாமல் படியளப்பார் என்று எங்க வீ ட்டில் கூட சின்ன வயதில் சொன்னார்களே) இன்னும் நிறைய இருக்கு எழுத முடியவில்லை.. "ஒரு தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்" எழுதி வைத்து விட்டு பாரதி போய்விட்டான் எம்மால் வாசித்துவிட்டு பெருமூச்சி மட்டுமே விட முடிகின்றது.  இதுதான் கடவுளின் நியதி என்று நீங்கள் சொன்னால் ம்ம்ம்ம்................ கடவுள் இருக்கின்றார் என்று நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.

கடவுள் நம்பிக்கை உடைய அணைவரும் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? 
இறைமறுப்பு அவரவர்கள் மன உணர்ச்சி பகுத்தறிவு ஆகியவற்றை கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல என்பதே நிஜம்.

இப்போது கூட கடவுள் இல்லையென்று சொல்வதை விட கடவுள் என்று ஒருவர் இருக்க வேண்டும்.  அப்போதான் மனிதனில் மனிதமும் மாற்றமும் வரும். அது நடக்காது என்பதால், நான் பகுத்து அறிந்து கொண்டிருக்கும் இறைமறுப்பாளனே!!

இந்த பதிவின் யாரையும் வேதனை படுத்த நினைக்க வில்லை என் மனதில் உள்ள விடயங்களை மட்டுமே எழுதியிருகின்றேன். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.....

கருத்துக்களில் பிழை இருப்பின் மன்னியுங்கள்.



திங்கள், 19 மார்ச், 2012

இந்தியாவின் அசத்தல் வெற்றி

நேற்று நடைபெற்ற (18-03-2012) ஞாயிற்றுக்கிழமை இந்திய பாகிஸ்தான் அனிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணி அசத்தல் வெற்றி ஒன்றை பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய முகமது ஹபீஸ் மற்றும் நஸீர் ஜாம்ஷெட் ஆகியோரின் துடுப்பாட்டம் மிக சிறப்பாக அமைந்தது. இருவரும் சேர்ந்து 196 பந்துதுகளில் 200 ஓட்டங்களை கடந்தனர். இவர்கள் இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்ற இந்திய பந்து வீச்சாளர்களால் முடியாமல் போனது. (இந்தியா சார்பாக இப்போட்டியில் 8 பேர் பந்துது வீசியமை குறிப்பிடத்தக்கது) முதலில் ஹபீஸ் சதம் அடித்தார் பிறது ஜாம்ஷெட் சதம் அடிடித்தார்.

பாகிஸ்தான் அணி 224 ரன்களை எடுத்திருந்தபோது 112 ரன்கள் எடுத்திருந்த ஜாம்ஷெட் அஸ்வின் பந்தில் பத்தானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் . அடுத்து 225 வது ரன்னில் முகமது ஹபீசும், அசோக் டிண்டாவின் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய யூனிஸ்கான், உமர் அக்மலுடன் சேர்ந்து  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. 24 பந்துகளில் 28 ரன்களை அடித்த அக்மல், பிரவீன் குமாரின் பந்தில் காம்பீரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து யூனிஸ்கான் 34 பந்துகளில் 52 ஓட்டங்கள எடுத்த நிலைலயில் பிரவீன் குமாரின் பந்தில் சுரேஷ் ரெய்னாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஷாகித் அப்ரிடி 9 ஓட்டங்களிலும் , ஹமத் ஆஸம் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பாக். அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களை குவித்தது. மிஸ்பா உல் ஹக் 4 ரன்களுடனும், உமர்குல் ரன் எதுவும் எடுக்காமலும்  இருந்தனர்.

இந்திய அணி.....
 கோலி மீண்டும் ஒரு சதம்
 
 பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி போட்டி தொடங்கிய இரண்டாவது பந்திலேயே கௌதம் கம்பீரை பறிகொடுத்தது. எனினும் சச்சின்  கோலி இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களை பகிர்ந்தனர். சச்சின் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், விராத் கோலி தனது 11 வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் இறுதியாக விளையாடிய நான்கு ஒரு நாள் போட்டிகளில் மூன்றில் சதமடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக 150 ரன்களை ஐ கடந்த கோலி மொத்தமாக 148 பந்துகளில் 22 பவுன்றிகள், 1 சிக்ஸர் அடங்களாக 183 ஓட்டங்களை எடுத்தார். 

விராத் கோலியுடன் ஜோடி சேர்த ரோஹித் ஷர்மா 68 ஓட்டங்களை எடுத்தார். போட்டி முடிவடைய இருந்த தருணம் இருவரும் ஆட்டமிழந்த போதும், சுரேஷ் ரைனா, தோனி ஆகியோர் களமிறங்கிய சில நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடித்தனர். கோலியின் அதிரடியால் 47.5 ஓவர்களில் வெற்றி இலக்கை இறுதியாக கடந்தது இந்தியா.  அதிரடியாக 183 ரன்களை குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

இப்போட்டியில் பாகிஸ்தான் தோல்வியுற்ற போதும் போனஸ் புள்ளிகளை இழக்காததால், இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. இந்தியா - பங்களதேஷ் அணிகளில் எது இறுதி போட்டிக்கு செல்லும் என்பது இலங்கையுடன் பங்களாதேஷ் அணி விளையாடும் போட்டியின் வெற்றி பெறும் அணியின் சார்பில் தீர்மானிக்கப்படும்.

இவ்வெற்றியின் மூலம் இந்தியாவால் விரட்டி அடிக்கப்பட்ட மிகப்பெரிய இலக்கு இதுவாகும்.

மேலதிக விபரம்....... 
நன்றி

  • சில தகவல்கள் இணையதளங்களில் எடுக்கப்ட்டது