சனி, 26 ஜனவரி, 2013

“விஸ்வரூபம் விஷயத்தில் ஏன் பதுங்குகிறீர்கள் சக கலைஞர்களே?” பாரதிராஜா கேள்வி!


“தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று ஆச்சரியப்பட்டுள்ளார், இயக்குநர் பாரதிராஜா.
இயக்குநர் பாரதி ராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு கலைஞன் என்பவன் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சுறுதியோடு, பாரதியைப் போல சமூக விழிப்புணர்வுக்காக போராடுபவன். எழுத்தாளராகட்டும், கவிஞராகட்டும், திரைப்பட கலைஞனாகட்டும், எந்த துறையின் விமர்சகனுமாகட்டும், ஒரு படைப்பாளியாக துணிச்சலுடன் தன் கருத்தை பதிவு செய்பவனாக இருக்கவேண்டும். அதுதான் அவன் பொது வாழ்வின் சமூகக் கடமை.
பயந்து ஒளிபவன் படைப்பாளியாக, எழுத்தாளனாக, கலைஞனாக இருக்க முடியாது.
ஆனால் தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
திரையுலகில் ஒரு சிலர் மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் கலைஞர்களா?
திரையுலகில் இத்தனை அமைப்புகள் இருந்தும், அமைப்புகள் பிளவுபட்டு கிடப்பதாலோ, அல்லது தனிப்பட்ட மன மாச்சரியங்களாலோ யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இன்று கமல்ஹாசனுக்குத்தானே தலைவலி, வயிற்று வலி என்று நினைத்தால், நாளை நம்மில் ஒருவருக்கு இதே நிலை வரும் போது நிவாரணத்துக்கு யாரைத் தேடுவீர்கள்? எங்கே போவீர்கள்?
நமக்குள் ஒற்றுமை இல்லை.
கமல் என்ற தமிழ்க் கலைஞன் வியாபாரத்திற்காக தன்னை ஒரு போதும் அடகு வைத்தவன் அல்ல. சமூக பொறுப்புள்ளவன், மூட நம்பிக்கையை முறியடிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் திரையுலகில் மீசை வைக்காத பாரதியார். அவன் இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று படம் எடுப்பானா?
ஒரு முஸ்லீம் அங்கத்தினர் உட்பட தணிக்கைக் குழு அங்கீகரித்த ஒரு திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்று சிலர் சொன்னால், இந்த அரசியல் சட்டத்தில் நாம் எங்கே நின்று நியாயம் கேட்க வேண்டும் என்று புரியவில்லை. இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண, குடிமகனை கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.
ஒரு நல்ல கலைஞனை, ஒரு தமிழ் கலைஞனை, தமிழ்த் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.
என் இனிய தமிழ் மக்களே, நீங்கள் யோசிக்கத் தெரிந்தவர்கள், சிந்தித்துப் பாருங்கள். நியாயத்திற்கு போராடி ஒரு நடுநிலை கலைஞனுக்கு கை கொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை. தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம். தலை நிமிர்ந்து நிற்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி VIRUVIRUPPU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக